இருப்பதற்கென்று வருகிறோம் இல்லாமல் போகிறோம் -நகுலன்                                                                                   Download "Thiruarutpa" : English Version / Tamil Version / Chinese Version

Friday, November 4, 2011

நவீன ஓவியம் -எஸ். ராமகிருஷ்ணன்

சில கேள்விகள்.  சில விளக்கங்கள் – ஜோசப் ஜேம்ஸ்

மறைந்த பேரா. திரு. ஜோஸப் ஜேம்ஸ் இந்திய முன்னணி ஓவிய விமர்சகர்களில் ஒருவர். இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் முக்கியமான ஓவியப் பத்திரிக்கைகளில் இவர் விமர்சனங்களும் கட்டுரைகளும் வெளியாகி இருக்கின்றன.

நவீன ஓவியம் ஏன் புரியவில்லை. ?

உங்களுக்கு மரபு ஓவியம் புரிகிறதா என்று ஒருகணம் சிந்தித்துப் பாருங்கள். ஒரு சிலருக்கும் மட்டுமே அதன் தத்துவமும், கோட்பாடும் தெரிந்திருக்கின்றன. நீங்கள் சொல்லக்கூடியதெல்லாம், மரபு ஓவியம் உங்களுக்குப் பரிச்சயமானது என்பதுதான். நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதல்ல. நவீன ஓவியத்துடன் நமக்குப் பரிச்சயமில்லை. உண்மையில் அதுதான் பிரச்சனை.

மரபு ஓவியத்துடன் எவ்வளவு பரிச்சயப்பட்டிருக்கிறீர்களோ அவ்வளவு பரிச்சயத்தை நவீன ஓவியத்துடன் ஏற்படுத்திக் கொண்டால் இப்பிரச்சினை மறைந்து போகும். அப்படியும், நீங்கள் அதைப் புரிந்து கொண்டவர்களாகிவிட மாட்டீர்கள். அதை நாம் விமர்சகர்களுக்கும் தத்துவவாதிகளுக்கும் விட்டு விடுவோமே.

இந்த நவீன ஓவியத்தைக் குழந்தைகள் கூட வரையலாம் போலிருக்கிறதே ?

இது உண்மையில்லை. பிகாசோ மாதிரி வரையக்கூடிய, அல்லது சகால் (Chagall) மாதிரி வண்ணம் இடக்கூடிய ஒரு குழந்தையைக் காட்டுங்கள் பார்ப்போம். ஆனாலும், குழந்தைகள் மாதிரி ஓவியம் வரைய முயலும் ஒவியர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இது ஏனென்றால். குழந்தைகள் எப்படி அழகாகப் புன்னகைக்கிறார்களோ, பேசுகிறார்களோ, அம்மாதிரியே அழகாக வரைகிறார்கள்., வண்ணமிடுகிறார்கள்.

பால்க்ளி (Paul Klee) போன்ற ஓவியர்கள் இதைச்  செய்கிறார்கள். ஆனால் இது முனைந்து செய்வது; முன்கூட்டிய யோசனையின் விளைவாகச் செய்வது. இப்படிச் செய்வது குழந்தைகளின் இயல்பல்ல. அவர்களால் அப்படி இருக்கவும் முடியாது.

அங்கங்கே வண்ணத் திட்டுகள், இங்கே ஒரு கோடு, அங்கே ஒரு கோடு என்றிருக்கும் ஓவிய்த்தை மனதில் கொண்டு, குழந்தைத் தனமான ஓவியம் என்று சொல்வீர்களேயானால், இது குழந்தைகள் செய்யக்கூடியதுதான். 

ஆனால் ஆச்சரியம்  என்னவென்றால், குழந்தைகள் இம்மாதிரி வரைய முனைவதில்லை, விரும்பவதில்லை (அவர்கள் தங்கள் கற்பனைக்குகந்த படங்களைத்தான் வரைகிறார்கள்). ஹார்ப்மன் (Hoffman), போல்லக் (Pollook) போன்ற ஓவியர்கள் இம்மாதிரிச் செய்ய விரும்புகிறார்கள் . படங்களை  வரையக்கூடிய ஓவியர்கள், ஏன் குழந்தைகள் செய்யக்கூடிய, ஆனால் செய்ய விரும்பாத ஒன்றைச் செய்ய விரும்புகிறார்கள்? .

இந்தப் புதிரை விடுவிக்க முயலுங்கள். இது  உங்களை நவீன ஓவியத்திற்கு இட்டுச் செல்லும்.

நவீன ஓவியத்தை விளக்க முடியுமா?

முடியாது. கர்நாடக இசையை விளக்க முடியுமா? முடியாது. அதை நீங்கள் ரசிக்கத்தான் முடியும். அதே போலத்தான் நவீன ஓவியமும். ஏன், எல்லாக் கலைகளூம்தான். இவற்றை ரசிக்கக்கூடிய அளவிற்கு, ஒருவருக்கு உதவலாம்; ஒருவரைப் பயிற்றுவிக்கலாம். ஆனல் இதற்கு முயற்சியும் கட்டுப்பாடும் தேவை. அதற்குப் பிறகு நீங்களாகவேதான் இதில் ஈடுபடவேண்டும்.

ஒரு தத்ரூபமான படத்தைப் பார்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறது, புரிகிறது. ஆனால் நவீன ஓவியத்தைப் பார்க்க்ம்போது ஒன்றுமே தோன்றுவதில்லையே, புரிவதும் இல்லை. ?

ஒரு தத்ரூபமான படம் நாம் ‘படிக்கக்’ கூடியது. இது காது, இது இடதுகை, இது ஒரு கிளை, இது ஒரு பெண், இதுதான் அவர்கள் செய்வது என்பது போல். நம்மால் இப்படி புரிந்து கொள்ள முடிவதற்குக் காரணம், ஒரு படம் நமக்குத் தெரிந்த அல்லது நாம் யூகிக்க்கூடிய ஒரு படிமத்தை அல்லது ஒரு கதையைக் கொண்டிருப்பதும் அல்லது அதைச் சார்ந்திருப்பதும் ஆகும்.

நவீன ஓவியம் இப்படி இந்த முறையில் ‘படிக்க’ கூடியது அல்ல. ஏனென்றால் இம்மாதிரிப் படிமங்களையோ அல்லது கதைகளையோ அது ஒத்திருப்பதில்லை. அது சம்பந்தப்படுத்துவது, அடிப்படையாகக் கொண்டிருப்பது, நாம் எதைப் பார்க்கிறோம், கற்பனை செய்கிறோம் என்பதல்ல; 

மாறாக, நாம் பார்க்ககூடிய விதங்கள் , கற்பனை செய்யக்கூடிய விதங்கள் ஆகியவற்றைத்தான். அடிப்படையில் இது நம்முள் இருக்கும் உள்ளார்ந்த, ஆழமான ஒழுங்குணர்ச்சியைக் கொண்டது,


இதுதான் நம்மால் பார்க்க, கற்பனை செய்ய, உருக்கொடுக்கக் காரணமாக இருக்கிறது. இந்த மாதிரி பார்க்கவும், உணரவும் நமக்கு ஊடுருவிப் பார்க்ககூடிய திறமை, முயற்சி தேவைப்படுகின்றன. ஒரு தத்ரூபமான படம், இதற்கு மாறாக, நமக்கு மிக நெருங்கியது; ஒரு கதை சொல்லும் – கேட்கும் விதத்தில் உடனடியான நேரிடைத் தன்மை கொண்டது.

நவீன ஓவியம் ஏன் தேவைப்படுகின்றன?

ஏனென்றால், நம்மைப்பற்றியும், உலகைப் பற்றியும் சொல்ல இருக்கும் எல்லாவற்றையும் சொல்ல கதை-முறை, விவரனை முறை போதாது என்பதைத் தெரிந்து கொண்டதால்.

கதை-முறை, விவரணை-முறை ஏன் போதாது?

முன்பு எப்போதையும் விட, கடந்த நூறாண்டுகளில் அறிவு மிக வேகமாக, பரவலாக வளர்ந்து விட்டது. பல்வேறு துறைகளில் உளவியல், பௌதிக விஞ்ஞானங்கள், இயற்கையியல், சமூகவியல் 
முதலியவற்றில் உண்டான கருத்தங்கள், கோட்பாடுகள் மனிதனைப்பற்றி, வாழ்க்கையைப் பற்றி புதிதான தெளிவை உண்டாக்கியிருக்கின்றன. இவை நம் வாழ்க்கையை, சிந்தனையை தீவிரமாகப் பாதித்து, நம் அன்றாடச் சிந்தனையிலும் ஊடுருவி, கலந்து விட்டன.

இவை கலையிலும் 
பொதுப்படையான அணுகுமுறையையும், பாத்திரப்படுத்தலையும் தவிர்க்க வேண்டிய அவசியத்தை உண்டாக்கி விட்டன. இதனாலேயே கதை முறை, விவரணை முறை சிக்கல் மிகுந்த இன்றைய 
வாழ்க்கையை எடுத்துச் சொல்லப் போதுமானதாக இல்லை.

நவீன ஓவியம் நம் கலாச்சாரத்தைச் சேர்ந்ததில்லை , இந்த ஓவியர்களெல்லாரும் மேற்கத்திய கலாசாரத்தைச் சாயல் பிடிக்கத்தானே செய்கிறார்கள்?

தத்ரூப ஓவியத்திற்கும் நவீன ஓவியத்திற்குமுள்ள வேறுபாட்டை நினைவில் கொள்ளுங்கள். 

தத்ரூப ஓவியம் விவரணை-முறையைச் சார்ந்திருக்கிறது. நவீன ஓவியம் நம்முடைய ஒழுங்குணர்சியைச் சார்ந்திருக்கிறது. நவீன ஓவியம் நம் கலாச்சாரத்திற்கு ஒவ்வாதது என்று சொல்வது, நம் கலாச்சாரத்திற்கு ஒழுங்குணர்ச்சியைப் பற்றிய அக்கறை இல்லை என்பதாகும். இது தவறு. இந்திய மரபு ஓவியம் விவரணை முறையை, கதை சொல்லும் முறையை 
மிகக் குறிப்பிடத்தக்க வகையில் சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கிறது.

ஆனால் இந்த விவரணை முறையைக் கையாண்ட கவிதையிலும், சிற்பங்களிலும், சிற்றோவியங்களிலும் (Miniatures) மிகக் தேர்ந்த, பண்பட்ட ஒழுங்குணர்ச்சி இருந்திருக்கிறது.

இதை மிகத் தெளிவாகவே மரபுத் தொழிற்கலைகளில் காணலாம். நகைகள், துணி டிசைன்கள், உலோகப் பண்டங்கள், தமிழ் 
நாட்டிலும் மற்ற மாநிலங்களிலும் பெண்கள் நினைவிலிருந்து வரையும் கோலங்கள் ஆகியவற்றில் இவற்றைப் பார்க்கையில், நம்முள் இருக்கும் ஒழுங்குணர்வை நாடும் நவீனத்துவம் நம் கலாச்சாரத்தைச் சார்ந்ததல்ல என்று சொல்ல முடியாது.

நவீன ஓவியம் ஒரு தீவிரமான கலைச்சாதனம் என்றால் அதை உருவாக்குவோரும், ரசிப்பவர்களும் மிகச் சொற்பம்தானே. அதாவது, இது ‘மேட்டுக்குடித்தனமையை’ உடையதுதானே. சாதாரண மக்களுக்கு இதனால் என்ன லாபம்?

இந்திய நவீன ஓவியம் இன்று படைக்கப்படுவதும், ரசிக்கப்படுவதும் சிறு குழுவினர் மத்தியில் என்பது உண்மை. ஆனால் இந்த மாதிரியான கலை நம் கலாச்சாரத்திற்குப் புதிது.

கலையிலும் சரி, விஞ்ஞானத்திலும் சரி, எந்தப் புதுமாற்றமுமே வெகுஜன அளவில் துவங்குவதில்லை. கலாச்சாரத்தின் எந்தப் புதிய அம்சமும் ஒரு சிலர் மத்தியிலே உருவாகிறது. அந்த அர்த்தத்தில் வேண்டுமானால், கலாசாரத்தில் உருவாகும் மாற்றம் மேட்டுக்குடியினரைச் சார்ந்தது என்று சொல்லலாம். இந்த மாற்றம் பரவ, கலாச்சாரத்தை மாற்ற, காலமும், புதிய உணர்வுக்கூறுகளுக்குத் தேவையான உந்துதலும் அவசியமாகின்றன.
சாதாரண மனிதன் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் பொருட்களுக்கு ஒரு புதிய அம்சத்தைச் சேர்க்கும்போதுதான் கலை அவனைச் சென்றடைகிறது. அவனுடைய துணிமணிகள், வீடுகள், மேஜை நாற்காலிகள், பாத்திரங்கள், இந்தியாவில் நவீன ஓவியம் இவற்றையெல்லாம் பாதித்திருப்பதாகப் பொதுவாகச் சொல்ல முடியாது.


இருந்தாலும் இன்றைய துணிகள், கட்டிடடக் கலை, உட்புற அலங்காரம், நகர்புற விளம்பரச் சாதனங்கள் முதலியவற்றைக் கவனியுங்கள். உங்களால் ஏதாவது ஒரு புது ஒழுங்குணர்ச்சியைக் காண முடிகிறது. 

இப்படித்தான் நவீன ஓவியம் சாதாரண மனிதனைச் சென்றடைகிறது.

நவீன ஓவியத்தை எப்படி ‘அனுபவிப்பது’?

ஒரு விஷயம் உங்களைத் தொட நீங்கள் அனுமதித்தாலன்றி எதையும் உங்களால் அனுபவிக்க முடியாது. நிறைய நவீன ஓவியங்களைப் பாருங்கள், அவற்றில் பல உங்களுடைய ஆர்வத்தைத் தூண்டாமலிருக்கலாம் பல உங்களுக்கு சுவாரஸ்யமின்றி இருக்கலாம். ஆனால் நிச்சயம் சில 
உங்களுக்குப் பிடிக்கும்.

இவற்றைப் பற்றிய தகவல்களை முடிந்தவரை தெரிந்து கொள்ள முயலுங்கள். யாரையாவது கேளூங்கள், ஒரு புத்தகம் படியுங்கள். அந்த ஓவியரையோ 
சிற்பியையோ புரிந்து கொள்ள முயலுங்கள். உங்கள் ஆர்வத்தையும் அக்கறையையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். விரைவிலேயே நீங்கள் இன்னும் அதிகமாகப் பார்க்கவும் தெரிந்து கொள்ளவும் விரும்புவீர்கள்.

இசையை, நாட்டியத்தை, நீங்கள் அனுபவிக்க வேண்டுமானால் இம்மாதிரியான முயற்சியைத்தானே மேற்கொள்வீர்கள்.

நவீன ஓவியம் பார்வையாளர்களிடமிருந்து அதிக மனமுயற்சியை வேண்டுகிறதல்லவா?

ரசிப்பதற்கு முயற்சி தேவையில்லை என்பது அடிப்படைத் தவறு. நீங்கள் ஒரு விஷயத்தை ரசிக்கும்போது , சற்று கூர்ந்து பார்த்தால் நீங்கள் அந்த விஷயத்திற்காகத் தயாராக இருப்பதும், ஏன், சில நேரங்களில், அதை உணரவும், அந்த உன்னதத்தை அனுபவிக்கப் பயிற்சி பெற்றிருப்பதும் புலப்படும்.

எதிலும் உன்னதத்தைக் காண உழைப்பும், தன்னைச் 
சாதனப்படுத்திக் கொள்வதும் தேவையாகின்றன. நவீன ஓவியமும் இதற்கு விதிவிலக்கல்ல.

நவீன ஓவியத்திற்காக நீங்கள் அதிக உழைப்பை, முயற்சியை மேற்கொள்ள வேண்டுமா என்பது, அது உங்களை எவ்வளவு தூரம் தொட்டிருக்கிறது என்பதைப் பொருத்தது. அது உங்களைத் தொடாமல், நீங்கள் நவீனமாகத் தோற்றமளிக்க முற்பட்டால், அந்த பாவனை, நடிப்பு எளிதில் 
கைக்கூடாததாகவும் மிகக் களைப்பைத் தருவதாகவும் இருப்பதை உணர்வீர்கள்.

நவீன ஓவியத்திற்கு, தத்ரூப ஓவியத்தைப் போல, நிச்சயமான, விசாலமான அர்த்தம் உண்டா?

முதலில் கவனிக்கப்பட வேண்டியது, தத்ரூப ஒவியத்திற்கு வரையறுக்கப்பட்ட , ஸ்தூலமான அர்த்தம் இல்லை என்பது. ஒரு தத்ரூபமான படத்தைப் ‘படிக்க’ முடியும். அதில் ஒவ்வொன்றும் இன்னதென்று தெரிந்து கொள்ள முடியும். ஆனால் அதனாலேயே அந்த ஓவியம் மொத்தத்தில் என்ன சொல்கிறது, எதை வெளிப்படுத்துகிறது என்று சொல்ல முடியுமா?

 ஒரு கவிதையில் ஒவ்வொரு சொல்லும் எதைக் குறிக்கிறது என்று ஒருவேளை கூற முடியும். அதனாலேயே அந்தக் கவிதை மொத்தமாக என்ன சொல்கிறதென்று புரிந்து கொண்டாற்போல் ஆகுமா?

அப்படியே இருந்தாலும் அதுதான் அதனுடைய வரையறுக்கப்பட்ட, ஸ்தூலமான, திட்டவட்டமான அர்த்தம் என்று கூற முடியுமா? முடியாது. ஒரு கவிதை எதைப் பற்றியது, அதன் பொருள் என்ன என்பது பல நேரங்களில் ஒரு உணர்ச்சி, மனதில் ஒரு நிலை என்றாகும்போது இவை 
ஸ்தூலமானவை அல்ல, நிர்ணயிக்கப்பட்டவையும் அல்ல.

ஒரு ஓவியத்தைப் படிக்க முடிந்தாலும், அதன் அர்த்தம் ஸ்தூலமானதல்ல. நவீன ஓவியம், தத்ரூப ஓவியத்தைப் போல படிக்கக்கூடியது 
அல்ல என்பதாலேயே அதன் அர்த்தம் இன்னும் அதிக அளவில் நிர்ணயிக்க இயலாத தன்மையைக் கொண்டது. இந்தத் தன்மைதான் நவீன ஓவியத்திற்கு அதிக சுதந்திரத்தையும், வீச்சையும் தருகிறது.

நவீன ஓவியத்தைப் பற்றிய ரசனையை எப்படி வளர்த்துக் கொள்வது?

முதலில் நவீன ஓவியத்தை உங்களுக்குள் வாங்கிக்கொள்ள உங்களைத் தயார்படுத்திக் கொள்ளலாம்.

இதற்கு உதவியாக முதலில் உங்கள் தாய்மொழியில் உள்ள நவீன இலக்கியத்தைப் பற்றி அக்கறை எடுத்துக் கொள்ளலாம். இது நவீன உணர்வுக்கூறு அல்லது நவீன மனப்பாங்கு பற்றிய பிரக்ஞையைத் தரும்.

இரண்டாவதாக , உங்ளுக்குப் பரிச்சயமான மரபு ஓவியத்தில் 
அதிக கவனம் செலுத்தலாம்.

இப்படிச் செய்வது அதைப் பற்றிய விமர்சன பூர்வமான பார்வையை 
வளர்த்துக் கொள்ள உதவும். மூன்றாவதாக, நவீன ஓவிய படைப்பாளர்களைப் பற்றிய நேரடியான பரிச்சயத்தை உண்டாக்கிக் கொள்வது.

இர்விங் ஸ்டோனின் (Agony and Ecstacy – மைக்கலாஞ்சலோ பற்றிய புத்தகம்) , Lust for Life ( வான்கோ – Van Gogh பற்றியது), சாமர்செட் மாமின் Moon and Six Pence ( கொகான் – Gaugin பற்றியது) முதலிய புத்தகங்கள் நவீன ஓவியத்தைப் பற்றி, ஓவியர்களைப் பற்றி நேரிடையான மனித பூர்வமாகப் 
புரிந்து கொள்ள உதவும். இவையனைத்தும் நவீன ஓவியத்திற்கு நம்மைத் தயார் செய்யும். 

இந்த இடத்திலிருந்து மேலே தொடர்ந்து போவது ஒருவனுடைய ஆர்வத்தையும், புதிய அனுபவங்களுக்கான வேட்கையையும் பொருத்தது.

நிச்சயமான அர்த்தம் ஒன்று சாத்தியமில்லை என்பதால் நவீன ஓவியத்தில் போலிகள் தோன்ற வாய்ப்பு உண்டல்லவா?

நவீன ஓவியம் படிக்கப்படக் கூடியதல்ல என்பதால், அத்தன்மையைப் போர்வையாகக் கொண்டு போலிகள் உருவாக வாய்ப்பு உண்டு. இதற்கெதிராக ஒரே பாதுகாப்பு, நவீன ஓவியத்தைப் பற்றிய பரவலான அறிவும் அக்கறையும், தொடர்ந்து ஓவியங்களைப் பார்ப்பதன் மூலம் பயிற்சி 
அடைவதும்தான்.

*** 
நன்றி : ஆபிதீன் பக்கங்கள் :’க்ரியா’, திரு. ஜோஸப் ஜேம்ஸ் 

***

வான்கோ, பிகாசோ, டாலி,  பால் காகின், பிரைடா காலோ உள்ளிட்ட பத்து முக்கிய நவீன ஒவியர்களை அறிமுகப்படுத்தும் விதத்தில் நான் எழுதிய சித்திரங்களின் விசித்திரங்கள் என்ற புத்தகம் சமீபத்தில் வெளியாகி உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் உயிர்மை ஆன் லைனில் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.

http://www.uyirmmai.com/Publications/Books.aspx

No comments:

Post a Comment