இருப்பதற்கென்று வருகிறோம் இல்லாமல் போகிறோம் -நகுலன்                                                                                   Download "Thiruarutpa" : English Version / Tamil Version / Chinese Version

Wednesday, November 2, 2011

பார்க்க வந்த இலை -எஸ். ராமகிருஷ்ணன்

என்னைப்பார்க்க ஒரு வாசகர் வந்திருந்தார். அவர் கையில் எங்கோ வழியில் பறித்த ஒரு இலையிருந்தது. பச்சை நிறத்தில் அகலமான இலை. அவர் சுவாரஸ்யமாக இலக்கியத் தகவல்களை பேசிக் கொண்டேயிருந்தார். எனக்கோ அந்த இலையிடமிருந்து கவனத்தை அகற்ற முடியவில்லை. எவ்வளவு பசுமை. எவ்வளவு அழகு.

அந்த இலை ஏன் என்னைப் பார்க்க வந்திருக்கிறது. இந்த நிமிசம் முன்பு வரை எங்கிருந்தது அந்த இலை. எந்த செடியின் இலையது. நான் அதை இதுவரை கண்டதேயில்லையே. எதற்காக என்னைத் தேடி வந்திருக்கிறது. என்ன பேச விரும்புகிறது. அல்லது எதைக் கற்றுத் தர வந்திருக்கிறது
இதைத் தற்செயல் என்று எடுத்துக் கொண்டு எளிதாகக் கடந்து போய்விட வேண்டும் தானா? நான் இலையைப் பார்ப்பதை அறிந்த நண்பர் அதை என்னிடமே தந்தார். அவர் எதற்காக அந்த இலையை பறித்தார் என்று தெரியவில்லை. பொதுவாக பதற்றத்தை மறைத்துக் கொள்ள விரும்புவோர் எதையாவது பறிப்பது, கையில் வைத்து ஆட்டிக் கொண்டிருப்பது போன்றவற்றை செய்வார்கள். நண்பருக்குள்ளும் அப்படியான பதற்றம் இருந்திருக்க கூடும்.

நான் இலையை கைகளில் வைத்து பார்த்தபடியே இருந்தேன். என்னவொரு வடிவமைப்பு. ஒரம் கிழிந்திருப்பது கூட அழகாகத் தானிருக்கிறது. உலகில் கோடிக்கணக்கான இலைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒரு விதம். ஒரு விநோத அழகு. ஏன் எதையும் நாம் ரசிக்க பழக்கவேயில்லை. நம்மோடு தொடர்பற்றது என்று எதற்காக நினைக்கிறோம்.

இலையின் பின்பக்கத்தைப் புரட்டிப் பார்த்தேன். அடர்த்தியாக நரம்புகள் ஒடுகின்றன. ஒரு நரம்பு பருத்துப் புடைத்திருக்கிறது. சிறுசிறு புள்ளியாக நிறமிகள் காணப்படுகின்றன. பள்ளிநாட்களில் இது போன்று இலைகளை நோட்டில் வைத்து உலரவைப்பேன். பசுமை காய்ந்து போய் இலை மிக மிருதுவாகிவிடும். வரைந்த ஒவியம் ஒன்றைக் கையில் எடுப்பது போன்றிருக்கும்.

கவிஞர் எமிலி டிக்கன்சன் தனக்கு விருப்பமான அத்தனை செடிகளின் இலைகளையும் சேகரித்து உலர வைத்து அதைத் தனது பொக்கிஷமாக பாதுகாத்து வந்தாள் என்று படித்த நினைவு.

இந்த இலைக்கு எத்தனை வயசிருக்கும். இலையை வைத்து செடியின் வயதைக் கண்டு சொல்ல முடியுமா. இலை என்று யார் கச்சிதமான பெயரை அதற்கு வைத்தது.

செடியை விட்டு வந்த பிறகு இதற்கு காற்றோடு என்ன உறவிருக்கும்.

பொதுவில் இலைகள் காற்றைக் கண்டு பயப்படுகிறதா. அல்லது காற்றை கண்டதும் உற்சாகம் கொள்கிறதா?

இலைகள் ஒடுங்கி நிற்பதை சில வேளைகளில் கண்டிருக்கிறேன். அடிவாங்கி அழுது அடங்கிய சிறுமிகளின் முகபாவத்திற்கு ஒப்பானது அது.

காற்று எவ்வளவு ஆவேசப்பட்டால் அதனால் பசுமையான ஒரு இலையை செடியிடமிருந்து பறித்துவிட முடியாது .

இலைகள் எப்போதுமே துள்ளுகின்றன. தன் பசுமையை காட்டிக் குதூகலம் கொள்கின்றன. என் கையில் ஒரு இலை வந்தவுடனே வயது கரைந்து போவதை உணர துவங்கினேன். அதை ஒரு சிறுவனை போல ஆட்டிக் கொண்டேயிருந்தேன். எவ்வளவு உற்சாகம். மனம் ஏன் இப்படி சிறுவிசயங்களில் இத்தனை லயப்பு கொள்கிறது.

நண்பர் தீவிரமாக இலக்கிய சச்சரவுகள், வம்புகள் பற்றி பேசிக் கொண்டேயிருந்தார். இலை என் கண்முன்னே வாடத்துவங்கியிருந்தது. உலகின் எந்த சக்தியாலும் இனி அதன் பசுமையைக் காப்பாற்ற முடியாது. இலை வாடுகிறது என்று நண்பர் சொன்னார்.

எவ்வளவு எளிய வாசகம். ஆனால் எவ்வளவு பெரிய துயர். மனித முயற்சிகள் அத்தனையும் ஒன்று கூடினாலும் ஒரு சிறிய இலையை அதன் வாடுதலில் இருந்து இந்த நிமிசம் காப்பாற்ற முடியாது தானில்லையா. நான் அமைதியாகப் பார்த்து க்கொண்டிருந்தேன்.

பூக்களின் நறுமணத்தை தான் யாவருமே ரசிக்கிறார்கள். அதன் முணுமுணுப்பை ஒருவருமே கேட்பதில்லை என்று குட்டி இளவரசன் நாவலில் சொல்வதாக ஒரு நினைவு.

நாம் இயற்கையைப் பிரித்து நமது புலன்கிளர்ச்சிக்கு ஏற்ப அறிந்து கொள்கிறோம். வாசனையிருப்பதும் இல்லாதிருப்பதும் அதனதன் தனித்துவம். இயல்பு. ஒரு மரத்தில் உள்ள இலைகள் யாவும் ஒன்று போல இருப்பதாக அவை நம்மை நம்ப வைக்கின்றன. அது நிஜமில்லை.

இலை ஒரு சிறிய கனவைப் போலிருக்கிறது.

இலை காற்றின் உதிர்ந்த சிறகைப்போலிருக்கிறது.

இலை ஒரு குறுஞ்சிரிப்பைப் போலிருக்கிறது.

இலை ஒரு இலையைப் போலவே இருக்கிறது.

மனம் அதன் மீது படிந்து நகர மறுக்கிறது. நண்பர் விடைபெற்றுப் போய்விட்டார்.
ஆனால் அந்த இலை வெயில் தாளமல் வாடி மடங்கி துவண்டு போயிருந்தது. ஆழமான துக்கமும் வலியும் மனதில் ஒரு முறை எழுந்து அடங்கியது.

வாழ்வு குறித்த ஏதோ ஒரு பெரும் உண்மையின் துளியை நாவில் உணர்ந்தைப் போலிருந்தேன்.
இனி அந்த இலையை என்ன செய்வது. மேஜையில் வைத்திருந்தேன். பாதியில் முறிந்த நட்பைப் போல அதைக் காண

மனது என்னவோ செய்து கொண்டிருந்தது.

அறையை விட்டு நான் வெளியேறினேன்.

என்ன செய்ய, என்னால் அது தானே முடிகிறது.

***

Source :

No comments:

Post a Comment